செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

காதல்
         உண்மையா காதலிக்கறவங்க என்னை மன்னிக்கணும். நாட்டு நடப்பைக் கொஞ்சம் சொல்லியிருக்கேன்.
          இன்று காதலர் தினம். நானும் எவ்வளவோ பேர்கிட்ட கேட்டுட்டேன் யாருமே சொல்ல மாட்டேங்கறாங்க, காதல்னா என்னங்க? தாய், தந்தையர் தினங்களை யாரும் சிறப்பாக கொண்டாடறதில்லை. ஆனா இந்த காதலர் தினத்தை மட்டும் எல்லாருமே, காதலிக்காதவங்க கூட கொண்டாடணும்னு நினைக்கிறாங்க. மீடியாவும் ரொம்ப அக்கறை எடுத்து இதை மட்டும் பிரபலப்படுத்தறாங்க. ஆனா இதுல எத்தனை பேர் உண்மையா காதலிக்கராங்கன்னு தெரியலை. இன்றைய காலகட்டத்தில் காதல்ங்கிற பேர்ல ஊர சுத்திட்டு கடைசியா வீட்டுல பார்த்த ஆளை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுறாங்க. இந்த மாதிரி செய்யறவங்களைப் பார்த்து நான் கேக்குறேன். இதுதான் உண்மைக் காதலா?
          இன்று எல்லா ஊர்களிலும் காதலர் தின கொண்டாட்டம்தான். நம்ம நாட்டைப் பொறுத்தவரை இப்ப ஒரு பதினைந்து வருடங்களாகத்தான் காதலர் தினம் பிரபலம். ஏன்னா நம்ம நாட்டு கலாசாரம் அப்படி. நம்ம நாட்டைப் பொறுத்தவரை அம்மா அப்பா பார்க்கற துணையை ஏத்துக்கிரதுதான் வழக்கம்.எப்போ மேற்கத்திய கலாசாரம் உள்ள வர ஆரம்பிச்சதோ அப்பா இருந்து நம்ம நாட்டுக்கு சனி பிடிச்சுக்கிட்டது. பசங்களும் பொண்ணுங்களும் கை நிறைய சம்பத்திக்க ஆரம்பிச்சுட்டாங்க, பெத்தவங்க மேல மரியாதை குறைஞ்சுடுச்சு. ஒரு பையனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்தவுடனே வர்றது காதல் இல்லை, அது வெறும் பருவக் கவர்ச்சி. ஆனா இதை காதல்னு நினைச்சுக்கிட்டு நம்ம பசங்க பண்ற அட்டகாசம் இருக்கே, தாங்க முடியலை. பொண்ணுகளும், நம்ம செலவுக்கும், நாலு இடத்துக்கு வண்டில கூட்டிட்டுப்போறதுக்கும் ஒரு ஆள் இருந்தா தேவலைன்னு பார்த்து சிரிச்சு வைக்கிறாங்க. ஆனா வாழ்க்கைன்னு வரும்போது பொண்ணுக தெளிவா முடிவு ஈசியா எடுத்துடறாங்க. ஆனா பசங்க தண்ணியடிச்சுட்டு தானும் தூங்காம மத்தவங்களையும் தூங்க விடாம புலம்பித் தள்ளிடறாங்க.
         நானும், இந்த வருஷம் பத்து நாளைக்கு முன்னாடியே என்னோட பக்கத்துல காதல்னா என்னன்னு கேட்டிருந்தேன். ஒருத்தரும் சரியா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. என்னோட கல்லூரி நண்பர் ஒருத்தர் "அது ஒரு அரிப்பு மாதிரிட, சொறியும்போது சுகமா இருக்கும். அப்புறம் பார்த்தா வடுவா மாறிடும்"னு சொன்னார்.
          மற்றொரு நண்பர் சொல்லும்போது, "அது சரக்கடிக்கற மாதிரி, கொஞ்சமா அடிச்சா பெருசா ஒன்னும் பாதிப்பில்லை, ஆனா நிறைய குடிச்சுட்டா உடம்புக்கு ஆகாது" அப்படின்னார்.
          என்னவோ என்னோட புலம்பலை கொட்டியிருக்கேன், இது எத்தனை பேர் காதுல விழப் போகுதுன்னு தெரியலை. அப்படியே யாராவது காதல்னா என்னன்னு சொல்லுங்க பிளிஸ்....

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சாதனை படைத்த இந்தியா
அடிலேய்டில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இதற்கு முன் அடிலேய்டில் பெற்ற தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய கிரிக்கெட் அணி.
 டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். அனுபவ வீரரான பாண்டிங் 6 ரன்களில் வினய்குமாரிடம் சரணடைந்தார். அதன் பின் களமிறங்கிய கிளார்க் அதிரடியில் ஈடுபட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்நிலையில் டேவிட் வார்னர்(18) ரன் அவுட் ஆக தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார் பாரெஸ்ட். சற்று நேரத்தில் உமேஷ் வேகத்தில் காலியானார் கிளார்க்(38). அதன் பின்னர் டேவிட் ஹஸ்சி பாரெஸ்ட் உடன் இணைந்தார். இந்த இணை கவனமாக ஆட அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இந்நிலையில் பாரெஸ்ட் 66 ரன்களில் உமேஷிடமே வீழ்ந்தார். கிறிஸ்டியன் 39 ரன்களில் ரன் அவுட்டாக சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹஸ்சி 72 ரன்களில் ஜாகிர்கானிடம் வீழ, இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா அணி. 
பந்துவீச்சில் வினய் குமார், உமேஷ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளும் ஜாகிர்கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் மீண்டும் ஏமாற்றினார்.
பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு இந்த முறை சிறப்பான துவக்கம் கொடுத்தனர் சேவாக்கும் காம்பிரும். இந்த இணை 52 ரன்களைச் சேர்த்தபோது 20 ரன்களில் ஆட்டமிழந்தார் சேவாக். விராட் கொஹ்லி(18) இந்த முறை ஏமாற்ற காம்பிருடன் இணைந்தார் ரோஹித் ஷர்மா. மூன்றாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா(33). ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதும் தளராமல் போராடிய காம்பிர் 92 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதன்பின் தோனியும் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணியை மீட்கும் வேளையில் ஈடுபட்டனர். டோனி தொடர்ந்து மந்தமாக ஆட பவுண்டரிகள் மூலமாக ரன் சேர்க்கும் வேளையில் ஈடுபட்டார் ரெய்னா. அடித்து ஆடும் முயற்சியில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார் ரெய்னா. அதன் பின் வந்த ஜடேஜா(12) சோபிக்கவில்லை. இறுதி ஓவரில் தோனி அட்டகாசமாக ஒரு சிக்ஸர் அடிக்க 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது இந்திய அணி. டோனி ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். அடிலேய்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் மெக்கே 3 விக்கெட்டுகளும் டோஹர்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக காம்பிர் தேர்வு செய்யப்பட்டார்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

எங்கே போகிறது மாணவ சமுதாயம்?
          நேற்று மாலை அந்த செய்தியை இணையதளத்தில் பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் ஒரு ஆசிரியை கொலை செய்து விட்டான் என்பதே அச்செய்தி.
          இது குறித்து இன்றைய முழுவிவரம் காணும்போது, வகுப்பறைக்கு சரியாக வராததாலும் ஒழுங்காக படிக்காததாலும் அதுகுறித்த அறிக்கையை அந்த ஆசிரியை அந்த மாணவனின் வீட்டுக்கு அனுப்பியதால் கோபம் கொண்ட அந்த மாணவன் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். பதினைந்து வயதுகூட நிரம்பாத நிலையில் கத்திஎடுக்கும் நிலைக்கு அந்த மாணவன் துணிந்துள்ளான் என்றால் இந்த சமுதாயம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்லமுடியாது. ஒழுக்கமும் பண்பும் கற்றுத் தரப்படும் பள்ளிவகுப்பறையில் இந்த கொலை நடந்துள்ளது இந்த கால மாணவர்களின் மனநிலையை எப்படி எடுத்துக்கொள்வது என்ற கேள்வியை கொளுத்திப்போட்டுள்ளது. மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்துக்கு முன்னதாக போற்றப்படும் குருவை ஒரு மாணவன் கொலை செய்துள்ளது மாணவர்களின் மத்தியில் குரு மீதான மரியாதையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
          சில ஆண்டுகளுக்கு முன்தான் தமிழக அரசு மாணவர்களை அடிக்கக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டுவந்தது. அதற்கு முன்னர் மாணவர்களை திருத்த பிரம்பைக் கையில் எடுத்த ஆசியர்கள் அப்போது மனம் மாறி பிரம்பைக் கையில் போட்டனர். அதைவிட சட்டத்தால் மாற்றப்பட்டனர் என்பதே உண்மை. ஆனால் அரசு இந்த சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? மாணவர்களின் இந்த மனநிலைக்கு காரணம் என்ன?
        முதல் காரணம் இன்றைய பெற்றோர்களின் கவனிப்பு முழுவதுமாக குழந்தைகளின் மேல் இல்லை என்பதே. அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் அதே சுதந்திரத்தை எல்லா இடங்களிலும் எதிர்பார்க்கிறார்கள், அது கிடைக்காத போது மனநிலையில் மாற்றம் நிகழ்கிறது. அதை பெற்றோர் கவனிப்பது இல்லை. இன்றைய மாறிவரும் நாகரிகத்தில் குழந்தைகளை பெற்றோர் கவனிப்பதே இல்லை என்பதே உண்மை நிலை. பள்ளிக்கு அனுப்பிவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருக்கும் பெற்றோர் அங்கு குழந்தைகளின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இது குழந்தைகளின் மனதை மேலும் கல்லாக்குகிறது. நாட்கள் செல்ல செல்ல மாணவர்கள் மனநோயாளிகள் ஆகிறார்கள். என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் கெட்டுப்போவதற்கு முதல் காரணம் பெற்றோர்தான்.  தந்தைகள் பணம் சம்பாதிப்பதில் கவனமாக இருக்க தாய்மார்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு டிவி தொடர்களில் மூழ்கிவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிள்ளை பெற்றுவிட்டால் கடமை முடிந்துவிடுகிறது.
          இரண்டாவதாக இன்றைய மீடியா. முக்கியமாக சினிமா மற்றும் டிவி. கொலை செய்த மாணவன் கொலை செய்வது எப்படி என்று அக்னிபாத் இந்தி திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியுள்ளான். இன்றைய சமுதாயச் சீரழிவிற்கு சினிமா முக்கிய பங்காற்றுகிறது என்றால் மிகையில்லை. இன்றைய சினிமாக்களில் காமமும் வன்முறையும் தான் முக்கியமாக இடம்பெற்றுள்ளன. பணத்தை தேடி ஓடும் கூட்டம் இதை எல்லாம் கண்டு கொள்ளப்போவதில்லை. வெளியில் இருக்கும் அரக்கனை வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்க்கும் சாதனம் டிவி. இன்றைய டிவி நிகழ்ச்சிகளில் ஒருசில தவிர மற்றவை எல்லாம் பயன் இல்லாதவை. டிவி தொடர்களிலும் பழிவாங்குதல், வன்முறை மற்றும் காதல் என்ற பெயரில் காமம் ஆகியவை தான் அதிகம் காணப்படுகிறது.
          மூன்றாவதாக பள்ளி நிர்வாகங்கள், இன்றைய காலகட்டத்தில் கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்படுகின்றன. அதிலும் அரசு சட்டம் போட்டபிறகு பள்ளிகள் மாணவர்களின் செயல்பாடுகளை உற்றுநோக்கி திருத்தும் வேலையை அறவே விட்டு விட்டார்கள். நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத்தர வேண்டிய பள்ளிகள் இன்று தரம் கெட்டுப்போய் உள்ளன. இன்று சர்வசாதாரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து செல்கிறார்கள். தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஆசிரியர்களால் கண்டிக்க முடிவதில்லை. எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில் மாணவர்கள் செல்போனில் ஆசிரியைகளை தவறாக படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஆசிரியைகள் கவனமாக இருந்ததால் அது தடுக்கப்பட்டுவிட்டது. அந்த மாணவர்களை கண்டிக்க முடியவில்லை. அவர்களின் பெற்றோர்கள் ரவுடிகள், அரசியல் செல்வாக்கு உடையவர்கள். ஒரு சில ஆசிரியைகள் இடமாற்றம் பெற்று வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டார்கள். நிச்சயம் அதுவும் ஒருநாள் நடக்கும், அதனாலும் பலர் பாதிக்கப்படுவார்கள். அப்போது அரசு என்ன செய்யப்போகிறது?

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

தொடரும் தோல்வி
          ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோற்றதன் மூலம் தோல்வி முடியவில்லை இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது என்று கூறியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
          இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் கடந்த ஞாயிறன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். முன்னதாக இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர் சேவாக்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணியில் இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள்(அஷ்வின், ராகுல் ஷர்மா) தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மேலும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். வேகத்தில் வினய் குமார் மற்றும் பிரவின் குமார் அணியில் இடம் பெற்றிருந்தனர். அனுபவ வீரரான ஜாகிர் கான் இடம் பெறவில்லை.
          முதலில் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்கத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசி அதிர்ச்சி அளித்தனர் வேக பந்துவீச்சாளர்கள். துவக்கத்தில் 19 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி. இந்நிலையில் 11 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. மழை நின்றபின் ஆட்டம் தொடங்கிய போது ஆட்டம் 32 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா அணி ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது. ஹஸ்சி சகோதரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை ஒரு கை பார்த்தனர். பவுண்டரிகள் பறந்தன. போதாக்குறைக்கு ஜடேஜா இரண்டு நோ பால்களை வீசி ரன்களை வாரிக் கொடுத்தார். முடிவில் 32 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹஸ்சி ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார்.
அதன் பின் சற்றே கடினமான இலக்கை துரத்தத் தொடங்கிய இந்திய அணிக்கு 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர்.  தொடர்ந்து காம்பிரும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் கொஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் இணைந்து அணியை மீட்க முயன்றனர். கொஹ்லி 31 ரன்களிலும் ரோஹித் 21 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு மற்ற பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என்று ஆட இறுதியில் ரன்களுக்கு 151 ஆட்டமிழந்தது இந்திய அணி.
          அணித் தேர்வில் மீண்டும் தவறு செய்கிறார் டோனி. வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டிய அவசியம் என்ன? போதாக் குறைக்கு இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர்கள் தான். இர்பான் பதான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதர்க்கான காரணம் என்ன? அணித்தேர்வில் கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் தோல்விகளை தவிர்க்க முடியும்.
          மேலும் ஸ்டார் வீரரான சச்சினின் ஆட்டம் அணியின் வெற்றியை பாதிக்கிறது. அவர் நூறாவது சதம் அடிக்கும் வரை சிறப்பாக ஆட வாய்ப்புகள் குறைவு. அவரால் துவக்கம் பாதிக்கப்படுவதால் இந்திய மத்திய வரிசை ஆட்டக்காரர்களுக்கு சுமை அதிகரிக்கிறது. என்று தான் விடிவு காலம் பிறக்கும் என்று தெரியவில்லை.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

எதிர்பார்ப்புகளும் ஏமாற்றமும்
உலகின் இரு தலை சிறந்த அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் என்றதும் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பான ஒரு தொடரை எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றிவிட்டது இந்திய அணி. மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்தும் அனைத்து போட்டிகளிலும் எளிதில் சரணடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்திய அணி.
ஆஸ்திரேலியா தொடர் என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் லட்சுமணன். அவரைக் கண்டாலே ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களுக்கு ஒருவித பயம் தோன்றும். ஆனால் 4 போட்டிகளில் வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்தார் அவர். அவரை விட பந்துவீச்சாளரான அஸ்வின் அதிக ரன்கள்(163) எடுத்து அவரது பார்மை கேள்விக் குறியாக்கினார்.
அடுத்து டிராவிட். அணியின் தடுப்பு சுவராககக் கருதப்படும் இவர் அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியான முறையில் ஆட்டமிழந்து வெறுப்பேற்றினார். இவரது இந்த வீழ்ச்சி அணியைப் பெரிதும் பாதித்தது என்பதில் சந்தேகமில்லை. அவர் எடுத்த ரன்கள் 194 சராசரி 24.25.
அடுத்து கிரிக்கெட்டின் கடவுளாகக் கருதப்படும் சச்சின். 100வது சதம் அடிக்கும் ஆசையில் ஆட்ட முறையையே சந்தேகப்படும் அளவிற்கு சொதப்பினார். ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது மட்டுமில்லாமல் அணியும் தொடர்ந்து தோற்றது வருத்தமான விஷயம். அவர் எடுத்த ரன்கள் 287 சராசரி 35.87. தனிப்பட்ட சாதனைக்கான ஆசை இந்திய அணியை பெரும் அவமானத்திற்குள்ளாக்கியது மட்டுமில்லாமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அடுத்து கேப்டன் தோனி, பேட்டிங்கையையே மறந்தது போல நடந்துகொண்டார் என்றால் மிகையாகாது. கேப்டனாவதற்கு முன் இருந்த தோனி இப்போது இல்லை, ரன்கள் குவித்தவர், இன்று அதிரடியாக ஆடுவதற்கு பயப்படுகிறார். மூன்று போட்டிகளில் பங்கேற்று வெறும் 102 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
துவக்கம் வழக்கம் போல் சொதப்பியது. சேவாக்(198), கம்பீர்(181) பெரிதாக சோபிக்கவில்லை என்பது கவலை தருவதாக இருந்தது. இதனால் பின்வரிசை வீரர்களுக்கு சுமை அதிகரித்தது.
அனுபவ வீரர்கள் எல்லாம் தடுமாற ஆறுதல் தந்தவர் விராட் கோஹ்லி. இந்திய அணி சார்பில் இவர் மட்டுமே சதமடித்தார். மொத்தமாக 4போட்டிகளில் பங்கேற்று 300 ரன்கள் எடுத்தார். சராசரி 37.50
தொடரிலேயே மிகவும் அவமானப் படுத்திய விஷயம் கிளார்க் ஒரு இன்னிங்க்சில் எடுத்த 329 ரன்களைக் கூட தொடர் முழுவதும் விளையாடி ஒரு இந்திய வீரரும் எடுக்கவில்லை என்பதுதான்.
கிடைத்த தோல்விகளை மறந்து அடுத்து நடைபெற இருக்கும் முத்தரப்பு தொடருக்கு தயார் நிலையில் உள்ளது இந்திய அணி. இதிலாவது சாதிப்பார்கள் நம் வீரர்கள் என்று நம்புவோம்.