எங்கே போகிறது மாணவ சமுதாயம்?
நேற்று மாலை அந்த செய்தியை இணையதளத்தில் பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் ஒரு ஆசிரியை கொலை செய்து விட்டான் என்பதே அச்செய்தி.
இது குறித்து இன்றைய முழுவிவரம் காணும்போது, வகுப்பறைக்கு சரியாக வராததாலும் ஒழுங்காக படிக்காததாலும் அதுகுறித்த அறிக்கையை அந்த ஆசிரியை அந்த மாணவனின் வீட்டுக்கு அனுப்பியதால் கோபம் கொண்ட அந்த மாணவன் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். பதினைந்து வயதுகூட நிரம்பாத நிலையில் கத்திஎடுக்கும் நிலைக்கு அந்த மாணவன் துணிந்துள்ளான் என்றால் இந்த சமுதாயம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்லமுடியாது. ஒழுக்கமும் பண்பும் கற்றுத் தரப்படும் பள்ளிவகுப்பறையில் இந்த கொலை நடந்துள்ளது இந்த கால மாணவர்களின் மனநிலையை எப்படி எடுத்துக்கொள்வது என்ற கேள்வியை கொளுத்திப்போட்டுள்ளது. மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்துக்கு முன்னதாக போற்றப்படும் குருவை ஒரு மாணவன் கொலை செய்துள்ளது மாணவர்களின் மத்தியில் குரு மீதான மரியாதையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்தான் தமிழக அரசு மாணவர்களை அடிக்கக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டுவந்தது. அதற்கு முன்னர் மாணவர்களை திருத்த பிரம்பைக் கையில் எடுத்த ஆசியர்கள் அப்போது மனம் மாறி பிரம்பைக் கையில் போட்டனர். அதைவிட சட்டத்தால் மாற்றப்பட்டனர் என்பதே உண்மை. ஆனால் அரசு இந்த சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? மாணவர்களின் இந்த மனநிலைக்கு காரணம் என்ன?
முதல் காரணம் இன்றைய பெற்றோர்களின் கவனிப்பு முழுவதுமாக குழந்தைகளின் மேல் இல்லை என்பதே. அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் அதே சுதந்திரத்தை எல்லா இடங்களிலும் எதிர்பார்க்கிறார்கள், அது கிடைக்காத போது மனநிலையில் மாற்றம் நிகழ்கிறது. அதை பெற்றோர் கவனிப்பது இல்லை. இன்றைய மாறிவரும் நாகரிகத்தில் குழந்தைகளை பெற்றோர் கவனிப்பதே இல்லை என்பதே உண்மை நிலை. பள்ளிக்கு அனுப்பிவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருக்கும் பெற்றோர் அங்கு குழந்தைகளின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இது குழந்தைகளின் மனதை மேலும் கல்லாக்குகிறது. நாட்கள் செல்ல செல்ல மாணவர்கள் மனநோயாளிகள் ஆகிறார்கள். என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் கெட்டுப்போவதற்கு முதல் காரணம் பெற்றோர்தான். தந்தைகள் பணம் சம்பாதிப்பதில் கவனமாக இருக்க தாய்மார்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு டிவி தொடர்களில் மூழ்கிவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிள்ளை பெற்றுவிட்டால் கடமை முடிந்துவிடுகிறது.
இரண்டாவதாக இன்றைய மீடியா. முக்கியமாக சினிமா மற்றும் டிவி. கொலை செய்த மாணவன் கொலை செய்வது எப்படி என்று அக்னிபாத் இந்தி திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியுள்ளான். இன்றைய சமுதாயச் சீரழிவிற்கு சினிமா முக்கிய பங்காற்றுகிறது என்றால் மிகையில்லை. இன்றைய சினிமாக்களில் காமமும் வன்முறையும் தான் முக்கியமாக இடம்பெற்றுள்ளன. பணத்தை தேடி ஓடும் கூட்டம் இதை எல்லாம் கண்டு கொள்ளப்போவதில்லை. வெளியில் இருக்கும் அரக்கனை வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்க்கும் சாதனம் டிவி. இன்றைய டிவி நிகழ்ச்சிகளில் ஒருசில தவிர மற்றவை எல்லாம் பயன் இல்லாதவை. டிவி தொடர்களிலும் பழிவாங்குதல், வன்முறை மற்றும் காதல் என்ற பெயரில் காமம் ஆகியவை தான் அதிகம் காணப்படுகிறது.
மூன்றாவதாக பள்ளி நிர்வாகங்கள், இன்றைய காலகட்டத்தில் கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்படுகின்றன. அதிலும் அரசு சட்டம் போட்டபிறகு பள்ளிகள் மாணவர்களின் செயல்பாடுகளை உற்றுநோக்கி திருத்தும் வேலையை அறவே விட்டு விட்டார்கள். நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத்தர வேண்டிய பள்ளிகள் இன்று தரம் கெட்டுப்போய் உள்ளன. இன்று சர்வசாதாரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து செல்கிறார்கள். தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஆசிரியர்களால் கண்டிக்க முடிவதில்லை. எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில் மாணவர்கள் செல்போனில் ஆசிரியைகளை தவறாக படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஆசிரியைகள் கவனமாக இருந்ததால் அது தடுக்கப்பட்டுவிட்டது. அந்த மாணவர்களை கண்டிக்க முடியவில்லை. அவர்களின் பெற்றோர்கள் ரவுடிகள், அரசியல் செல்வாக்கு உடையவர்கள். ஒரு சில ஆசிரியைகள் இடமாற்றம் பெற்று வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டார்கள். நிச்சயம் அதுவும் ஒருநாள் நடக்கும், அதனாலும் பலர் பாதிக்கப்படுவார்கள். அப்போது அரசு என்ன செய்யப்போகிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக