தொடரும் தோல்வி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோற்றதன் மூலம் தோல்வி முடியவில்லை இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது என்று கூறியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் கடந்த ஞாயிறன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். முன்னதாக இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர் சேவாக்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணியில் இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள்(அஷ்வின், ராகுல் ஷர்மா) தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மேலும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். வேகத்தில் வினய் குமார் மற்றும் பிரவின் குமார் அணியில் இடம் பெற்றிருந்தனர். அனுபவ வீரரான ஜாகிர் கான் இடம் பெறவில்லை.
முதலில் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்கத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசி அதிர்ச்சி அளித்தனர் வேக பந்துவீச்சாளர்கள். துவக்கத்தில் 19 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி. இந்நிலையில் 11 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. மழை நின்றபின் ஆட்டம் தொடங்கிய போது ஆட்டம் 32 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா அணி ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது. ஹஸ்சி சகோதரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை ஒரு கை பார்த்தனர். பவுண்டரிகள் பறந்தன. போதாக்குறைக்கு ஜடேஜா இரண்டு நோ பால்களை வீசி ரன்களை வாரிக் கொடுத்தார். முடிவில் 32 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹஸ்சி ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார்.
அதன் பின் சற்றே கடினமான இலக்கை துரத்தத் தொடங்கிய இந்திய அணிக்கு 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர். தொடர்ந்து காம்பிரும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் கொஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் இணைந்து அணியை மீட்க முயன்றனர். கொஹ்லி 31 ரன்களிலும் ரோஹித் 21 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு மற்ற பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என்று ஆட இறுதியில் ரன்களுக்கு 151 ஆட்டமிழந்தது இந்திய அணி.
அணித் தேர்வில் மீண்டும் தவறு செய்கிறார் டோனி. வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டிய அவசியம் என்ன? போதாக் குறைக்கு இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர்கள் தான். இர்பான் பதான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதர்க்கான காரணம் என்ன? அணித்தேர்வில் கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் தோல்விகளை தவிர்க்க முடியும்.
மேலும் ஸ்டார் வீரரான சச்சினின் ஆட்டம் அணியின் வெற்றியை பாதிக்கிறது. அவர் நூறாவது சதம் அடிக்கும் வரை சிறப்பாக ஆட வாய்ப்புகள் குறைவு. அவரால் துவக்கம் பாதிக்கப்படுவதால் இந்திய மத்திய வரிசை ஆட்டக்காரர்களுக்கு சுமை அதிகரிக்கிறது. என்று தான் விடிவு காலம் பிறக்கும் என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக