எதிர்பார்ப்புகளும் ஏமாற்றமும்
உலகின் இரு தலை சிறந்த அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் என்றதும் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பான ஒரு தொடரை எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றிவிட்டது இந்திய அணி. மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்தும் அனைத்து போட்டிகளிலும் எளிதில் சரணடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்திய அணி.
ஆஸ்திரேலியா தொடர் என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் லட்சுமணன். அவரைக் கண்டாலே ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களுக்கு ஒருவித பயம் தோன்றும். ஆனால் 4 போட்டிகளில் வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்தார் அவர். அவரை விட பந்துவீச்சாளரான அஸ்வின் அதிக ரன்கள்(163) எடுத்து அவரது பார்மை கேள்விக் குறியாக்கினார்.
அடுத்து கேப்டன் தோனி, பேட்டிங்கையையே மறந்தது போல நடந்துகொண்டார் என்றால் மிகையாகாது. கேப்டனாவதற்கு முன் இருந்த தோனி இப்போது இல்லை, ரன்கள் குவித்தவர், இன்று அதிரடியாக ஆடுவதற்கு பயப்படுகிறார். மூன்று போட்டிகளில் பங்கேற்று வெறும் 102 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
துவக்கம் வழக்கம் போல் சொதப்பியது. சேவாக்(198), கம்பீர்(181) பெரிதாக சோபிக்கவில்லை என்பது கவலை தருவதாக இருந்தது. இதனால் பின்வரிசை வீரர்களுக்கு சுமை அதிகரித்தது.
அனுபவ வீரர்கள் எல்லாம் தடுமாற ஆறுதல் தந்தவர் விராட் கோஹ்லி. இந்திய அணி சார்பில் இவர் மட்டுமே சதமடித்தார். மொத்தமாக 4போட்டிகளில் பங்கேற்று 300 ரன்கள் எடுத்தார். சராசரி 37.50
தொடரிலேயே மிகவும் அவமானப் படுத்திய விஷயம் கிளார்க் ஒரு இன்னிங்க்சில் எடுத்த 329 ரன்களைக் கூட தொடர் முழுவதும் விளையாடி ஒரு இந்திய வீரரும் எடுக்கவில்லை என்பதுதான்.
கிடைத்த தோல்விகளை மறந்து அடுத்து நடைபெற இருக்கும் முத்தரப்பு தொடருக்கு தயார் நிலையில் உள்ளது இந்திய அணி. இதிலாவது சாதிப்பார்கள் நம் வீரர்கள் என்று நம்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக