ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சாதனை படைத்த இந்தியா
அடிலேய்டில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இதற்கு முன் அடிலேய்டில் பெற்ற தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய கிரிக்கெட் அணி.
 டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். அனுபவ வீரரான பாண்டிங் 6 ரன்களில் வினய்குமாரிடம் சரணடைந்தார். அதன் பின் களமிறங்கிய கிளார்க் அதிரடியில் ஈடுபட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்நிலையில் டேவிட் வார்னர்(18) ரன் அவுட் ஆக தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார் பாரெஸ்ட். சற்று நேரத்தில் உமேஷ் வேகத்தில் காலியானார் கிளார்க்(38). அதன் பின்னர் டேவிட் ஹஸ்சி பாரெஸ்ட் உடன் இணைந்தார். இந்த இணை கவனமாக ஆட அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இந்நிலையில் பாரெஸ்ட் 66 ரன்களில் உமேஷிடமே வீழ்ந்தார். கிறிஸ்டியன் 39 ரன்களில் ரன் அவுட்டாக சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹஸ்சி 72 ரன்களில் ஜாகிர்கானிடம் வீழ, இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா அணி. 
பந்துவீச்சில் வினய் குமார், உமேஷ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளும் ஜாகிர்கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் மீண்டும் ஏமாற்றினார்.
பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு இந்த முறை சிறப்பான துவக்கம் கொடுத்தனர் சேவாக்கும் காம்பிரும். இந்த இணை 52 ரன்களைச் சேர்த்தபோது 20 ரன்களில் ஆட்டமிழந்தார் சேவாக். விராட் கொஹ்லி(18) இந்த முறை ஏமாற்ற காம்பிருடன் இணைந்தார் ரோஹித் ஷர்மா. மூன்றாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா(33). ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதும் தளராமல் போராடிய காம்பிர் 92 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதன்பின் தோனியும் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணியை மீட்கும் வேளையில் ஈடுபட்டனர். டோனி தொடர்ந்து மந்தமாக ஆட பவுண்டரிகள் மூலமாக ரன் சேர்க்கும் வேளையில் ஈடுபட்டார் ரெய்னா. அடித்து ஆடும் முயற்சியில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார் ரெய்னா. அதன் பின் வந்த ஜடேஜா(12) சோபிக்கவில்லை. இறுதி ஓவரில் தோனி அட்டகாசமாக ஒரு சிக்ஸர் அடிக்க 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது இந்திய அணி. டோனி ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். அடிலேய்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் மெக்கே 3 விக்கெட்டுகளும் டோஹர்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக காம்பிர் தேர்வு செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை: